சென்னை :விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் இன்று(டிச.09) வெளியாகியுள்ளது. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'வீர தீர சூரன்'.
இப்படத்தின் ப்ரோமோ வெளியானது முதல் கவனம் பெற்று வருகிறது. அது மட்டுமின்றி இப்படத்தின் கதை இரண்டாம் பாகத்திலிருந்து முதல் பாகத்திற்கு நகர்கிறது. அதன் காரணமாக புதுமையான முயற்சியாக வீர தீர சூரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் அருண்குமார் விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கியது குறித்து இயக்குநரை எஸ்.ஜே.சூர்யா பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க :நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த காளிதாஸ் ஜெயராம்; திருமண புகைப்படங்கள் வைரல்!
அந்த பதிவில், "நான், விக்ரம், சூரஜ் ஆகியோர் கொண்ட கிளைமாக்ஸ் காட்சியை மதுரையில் அருண்குமார் படமாக்கினார். அப்போது தனது அணியை அழைத்து 10 நாட்கள் ஒத்திகை பார்த்தார். பின்னர் படப்பிடிப்பு நடத்தினார். அந்த காட்சியை படமாக்கிய விதத்தை பார்த்தால் அவர் கலைத் தாயின் இளைய மகன் என கூறலாம்" என்றார்.
இந்நிலையில் வீர தீர சூரன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரின் தொடக்கத்தில், விக்ரம் தன் குழந்தையுடன் மளிகை கடையில் இருப்பது போன்ற காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது. 'வேணாம் பேசாம போயிரு' என்ற மாஸான டயால்க் உடன் டீசர் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், படமானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி படமும், நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வணங்கான் படமும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது வீர தீர சூரன் படமும் ஜனவரியில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எந்த படத்திற்கு செல்ல என்று குழப்பத்தில் உள்ளனர்.