சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தங்கலான் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நிலையில், படக்குழுவினர் இயக்குநர் பா.ரஞ்சித், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் தென்னிந்தியா முழுவதும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தங்கலான் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 15) வெளியானது முதல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை ஆகியவை ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்னதாக முன்பதிவில் சாதனை படைத்த தங்கலான், 2.5 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய அளவில் 12.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழ் மொழியில் மட்டும் 11 கோடி ரூபாயும், தெலுங்கு மொழியில் 1.5 கோடியும், மலையாளத்தில் 10 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு பகுதி வாரியாக தங்கலான் படம் பார்த்தவர்கள் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.