கில்லி ரீ ரிலீசை வைப் செய்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள் சென்னை: நடிகர் விஜய் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பின் இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யபட்டுள்ளது. இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கில்லி'. ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் பொழுதுபோக்கு படைப்பான கில்லி விஜய் திரைவாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
வித்யாசாகர் இசையில் அப்படிப் போடு, அர்ஜுனர் வில்லு ஆகிய பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் வைப் செய்யும் பாடல்களாக உள்ளது. இந்நிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று திரையரங்குகளில் ரீரிலிஸ் ஆகியுள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பாலமுருகன் அம்பத்தூரில் உள்ள முருகன் திரையரங்கில் ஏற்பாடு செய்த சிறப்பு காட்சியை காண விஜய் ரசிகர்கள் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அப்போது பட்டாசு வெடித்தும், விஜய் பேனருக்கு பால் ஊற்றியும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
குறிப்பாக விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் திரைப்பட பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கில்லி திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து கில்லி திரைப்படம் திரையிட்ட போது விஜயின் அறிமுக காட்சிக்கு அவரது ரசிகர்கள் விசிலடித்தும், காகிதங்களை தூக்கி எறிந்தும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் கில்லி திரைப்படம் வெளியான போது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி தீர்த்தனர். கில்லி படத்தின் ரீ ரிலிஸ் குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய விஜய் ரசிகரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான சந்தோஷ் என்பவர், “கில்லி படத்தை திரையரங்கில் பார்க்கத் தவறியவர்கள் இப்போது பார்க்கலாம்.
இத்தனை நாள் சினிமாவில் கில்லியாக இருந்த விஜய் இனி அரசியலிலும் கில்லியாக இருப்பார்” என்று தெரிவித்தார். தேர்தல் காலகட்டம் என்பதால் தமிழ் சினிமாவில் புதிய படங்கள் வரவு குறைவாகவே உள்ளது. இதனால் திரையரங்குகள் கூட்டமின்றி காணப்படுகிறது. இதன் காரணமாக ரீரிலிசாகும் படங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று கில்லி ரீரிலீஸ் ஆன நிலையில், வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மங்காத்தா திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் நடிகர் ஆகலாம்; நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?' - நடிகர் விஷால் கேள்வி - Actor Vishal