சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறார். மாவட்டம்தோறும் மன்றத்தை விரிவுபடுத்தி இரவு நேர பயிலகம், நூலகம், காலையில் பால் வழங்கல், மருத்துவ முகாம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதனிடையே, கடந்த ஆண்டு 10மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணத்தை பரிசளித்தார். இந்த நிலையில், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை விஜய் தொடங்கினார்.
மேலும், 2026ஆம் ஆண்டு வரவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதை இலக்காக கொண்டு செயல்படப் போவதாக அறிக்கையும் அவர் வெளியிட்டார். மேலும், இதுவரை ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொண்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அந்த அறிக்கையின் வாயிலாக கூறினார்.
இவ்வாறு விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு, பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேட்டபோது, நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தான் கட்சி தொடங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், ரஜினியிடம் விஜய் விளக்கியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்டம்தோறும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தியுள்ள நடிகர் விஜய், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். மேலும், இந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"பேச்சே கிடையாது வீச்சுதான்”.. GOAT அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா!