சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவரது படங்கள் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் விஜய்க்கு அரசியல் எண்ணம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தற்போது அரசியல் கட்சி தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி வருகிறார். உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளார் விஜய்.
கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கு நிர்வாகிகளை நியமித்து, அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. கட்சியின் தலைவராக விஜயும், பொதுச் செயலாளராக ஆனந்த் என்கிற முனுசாமி, பொருளாளராக வெங்கட் ரமணன், தலைமை நிலைச் செயலாளராக ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தஹிரா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டியதுடன், சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். அதேபோல், இந்த ஆண்டும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், தனது அரசியல் பயணத்திற்கான ஏற்பாடுகளை விஜய் செய்து வருகிறார். குறிப்பாக, பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த மாநாட்டில் கட்சியின் கொடி, பிரச்சார பாடல் உள்ளிட்டவற்றை அறிவிக்க உள்ளதாகவும், மாநாடு மதுரையில் நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்படுகிறது.