சென்னை: நடிகர் அப்புக்குட்டி தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நிறைய படங்களில் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் அப்புக்குட்டி நாயகனாக நடித்த 'அழகர்சாமியின் குதிரை' (Azhagarsamiyin Kuthirai) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
தற்போது இன்று அப்புக்குட்டியின் பிறந்தநாள். இந்த நிலையில், நடிகர் அப்புக்குட்டியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ராஜூ சந்ரா இயக்கத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் "பிறந்தநாள் வாழ்த்துகள்" (Pirantha Naal Vazhthukal) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி நேரடியாக வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ராஜு சந்திரா எழுதி இயக்கும் இப்படத்தை, பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரித்துள்ளனர். மேலும், மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜி மேத்யூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கிராமத்து எதார்த்தத்தை, காதலுடன் காமெடி கலந்து ஜனரஞ்சகமாகக் கதை எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார் ராஜூ சந்திரா. இசையை நவநீத் அமைக்க, கலையை வினோத் குமார் கையாண்டுள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டு அப்புக்குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கார்மேகம் போல வாரான் காளமாடன்.." மாரி செல்வராஜ் வெளியிட்ட புதிய படத்தின் அப்டேட்!