சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதனால் கட்டடப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, 40 கோடி ரூபாய்க்கு கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேலும் 25 கோடி ரூபாய் கட்டுமான பணிகளுக்கு தேவைப்பட்டது. அதற்கு நடிகர் சங்கம் சார்பில் வங்கிக் கடன் பெறுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 12.5 கோடி ரூபாய்க்கு வைப்புத்தொகை காட்டினால், வங்கி முப்பது கோடி ரூபாய் கடனாகத் தரத் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதற்காக நடிகர் சங்கம் சார்பில் நிதி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகிய இருவரும் 1 கோடி ரூபாய் நிதி அளித்த நிலையில், தற்போது நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப் பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய், நடிகர் சங்கத்திற்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆஸ்கரில் நினைவு கூறப்பட்ட இந்திய கலை இயக்குநர்…யார் இந்த நிதின் தேசாய்?