ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் பட்டையை கிளப்பிய 'விடுதலை சென்னை:இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து, கடந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம், விடுதலை பாகம் ஒன்று. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்திக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமாகிய இப்படம், திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையமைத்து பாடிய வழிநெடுக காட்டுமல்லி பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வந்தது. இப்படம் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றது.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ரோட்டர்டாமில் 53வது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, இம்மாதம் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் இருந்து ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படமும், வெற்றிமாறனின் 'விடுதலை' பாகம் 1 மற்றும் 2 படமும் பங்கேற்றுள்ளது. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படமும் கலந்து கொண்டுள்ளது. சமீபத்தில் இந்த விழாவில் ராமின் ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் திரையிடப்பட்டு வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், நேற்று (ஜன.31) வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்பட்டன. திரையிடப்பட்ட பிறகு, இறுதியில் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஐந்து நிமிடங்கள் கைதட்டி அமோக வரவேற்பை அளித்துள்ளனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி ஆகியோருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. விடுதலை இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தளத்தில், “இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 1 மற்றும் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு உலக மேடையில் மகுடம் சூடி, அரங்கம் அதிர 5 நிமிட கரகோஷத்துடன் ஆர்ப்பரிக்க வைத்த வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, எல்ரெட் குமார் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என பதிவிட்டு மகிழ்ச்சியினைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“என்ன மன்னிச்சிருங்க டாடி.. மன்னிச்சிருங்க” கண்ணீர் மல்க பேசிய ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்!