தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் - 1976 முதல் தொடர்ந்த சினிமா பயணம் ஓய்ந்தது! - DELHI GANESH

உடல்நிலை சரியில்லாமல் இருந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணியளவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் (Instagram / @Delhi Ganesh)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 9:47 AM IST

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால், நேற்றிரவு அவரது வீட்டில் காலமானார். இரவு 11.30 மணி அளவில் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

1976ஆம் ஆண்டு பாலச்சந்தரின் பட்டிணப் பிரவேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், இந்திய விமானப் படையில் வேலை பார்த்தவராவார். சினிமாவுக்காக தன் அரசு வேலையைத் துறந்து, முழு நேரக் நடிகனாக களம்கண்டார்.

1981ஆம்‌ ஆண்டு வெளியான ‘எங்கம்மா மகாராணி’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் அதிகளவில் நடித்து பிரபலமானவர். சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் உடனாக வெற்றி படங்கள்:

குறிப்பாக கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கே.பாலசந்தரின் ‘சிந்து பைரவி’ படத்திலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விருதுகள்:

அதேபோல், சின்னத்திரை மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். தனது மகனுக்காக ‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தையும் தயாரித்தார். 1979ஆம் ஆண்டு வெளியான ‘பசி’ திரைப்படத்திற்கு தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதேபோன்று 1993 - 1994 ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில அரசின் ‘கலைமாமணி விருது’ இவருக்கு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத்தின் 68ஆவது பொதுக்குழு கூட்டத்தில், இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கடைசி திரைப்படங்கள்:

1944 ஆகஸ்ட் 1ஆம் தேதி பிறந்த இவர், மூன்று மாதங்களுக்கு முன் தன் 80 வயதை பூர்த்தி செய்தார். இதற்காக இவருக்கு குடும்பத்தினர் சதாபிஷேக விழா நடத்தினர். சமீபத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன், நகைச்சுவை, வில்லன் மற்றும் பல குணச்சித்திர வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வழங்கிய இவரின் இழப்புக்கு திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறது. இவரது இழப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details