சென்னை: இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகி உள்ள படம் மெட்ராஸ்காரன். இப்படம் மூலம் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தை SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இறுதிகட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழா மேடையில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது, "என் புரடியூசர் ஜெகதீஸ் மற்றும் இந்த படம் ஆரம்பமாக காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாக கூட கேட்காமல் தயாரித்தார். இந்த படம் பற்றி அனைவரும் சொல்லி விட்டனர். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் நன்றி" என்றார்.
நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது, "அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீது எனக்கு சந்தேகம் இருந்தபோது வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட நடிகர் எஸ்.டி.ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.