சென்னை: நடிகை த்ரிஷாவின் வளர்ப்பு நாய் சாரோ (Zorro) இன்று (டிச.25) உயிரிழந்தது. தென்னிந்திய சினிமாவில் கிட்டதட்ட 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 1999ஆம் ஆண்டு வெளியான ’ஜோடி’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ’மௌனம் பேசியதே’ திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக நடித்தார். பின்னர் சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, திருப்பாச்சி, ஆறு, சம்திங் சம்திங், கிரீடம், பீமா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பிரபல நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நடிகை த்ரிஷா தனது வளர்ப்பு நாய் சோரோ உயிரிழந்துவிட்டதாக சோகத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “எனது மகன் சோரோ (Zorro) கிறிஸ்துமஸ் தினமான இன்று காலை உயிரிழந்து விட்டான். இதற்கு பிறகு எனது வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை என்பது என்னை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பத்தினரும் பெரும் மனமுடைந்து இருக்கிறோம். நான் எனது வேலையிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்” என கூறியுள்ளார்.