சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வந்த ’ஜெயிலர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில், த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ’வேட்டையன்’. இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் மிக முக்கியமாக ரஜினிகாந்தும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். கடைசியாக 1991ஆம் ஆண்டு, இந்தியில் வெளியான 'ஹம்' படத்தில் ரஜினிகாந்தும், அமிதாப்பச்சனும் இணைந்து நடித்திருந்தனர்.
அதன் பிறகு தற்போது வேட்டையன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்துள்ளனர். வேட்டையன் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினியின் திரைப்படம் வெளியாவதால் ’வேட்டையன்’ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.