சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தனது 34வது படத்தில் ’டாடா’ திரைப்படத்தை இயக்கி பிரபலமான கணேஷ் பாபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழக காவல்துறை டிஜிபி ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நடிக்கிறார். மேலும் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான ஷக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக ஜெயம் ரவி நடித்த ’பிரதர்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ’மக்காமிஷி’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த தீபாவளி பண்டிகைக்கு இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
தற்போது 'JR34' படத்தின் பூஜை நடைபெற்று நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 24வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பூஜையும் சில தினங்களுக்கு நடைபெற்றுள்ள நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முன்பு சுதா கொங்குரா படத்தில் வில்லனாக நடிக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் நிவின் பாலி என பல்வேறு பெயர்கள் அடிபட்டது.
இதையும் படிங்க: "அழகே, அஜித்தே" - ஸ்லிம் அன்ட் ஸ்டைலிஷான அஜித்குமார்! - ACTOR AJITH NEW LOOK
இந்நிலையில் ஜெயம் ரவி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும் சிறப்பம்சமாக இத்திரைப்படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படமாகும். சிவகார்த்திகேயன் 25, ஜிவி பிரகாஷ் 100 என அனைத்து ஸ்பெஷலாக அமைந்துள்ளதால் சுதா கொங்குரா படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான் நடிப்பில் புறநானூறு என்ற தலைப்பில் புதிய படம் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.