தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

“புதிய படப்பிடிப்புகள் நிறுத்தம் முடிவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்”- தென்னிந்திய நடிகர் சங்கம்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவான நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம் (Credits- TN Artists association FB Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் துவக்க வேண்டாம் என தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

மீண்டும் முடக்குவது ஏன்?அதில், “ஒட்டுமொத்த தமிழ்த் திரைத் துறையிலும் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வரும் காரணத்தால், 'புதிய படங்களின் படப்பிடிப்பு இல்லை' என்ற முந்தைய தீர்மானம் தளர்த்தப்பட்டு, கடந்த மாதம் கூட புதிய படங்களை துவங்கி படப்பிடிப்புகளும் நடந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது.

இதையும் படிங்க:நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நடக்காது; தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!

மிகப் பெரும் பாதிப்பு வர போகிறது:இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து உரையாடல் மூலமாக ஒரு சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், அந்தத் தீர்வு எட்டப்படும் தொலைவில் இருக்கும் போது, இந்த வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற தீவிரமான முடிவுகள், தீர்வு காணும் முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.

தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது:அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும். ஆகவே, இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக உண்டு, முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே தொழிலாளர் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல” என குறிப்பிட்டிருந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details