படத்துக்குத் தான் வசூலே தவிர நடிகருக்குக் கிடையாது - திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்! சென்னை:தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் திரையரங்குகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, “ஓடிடி தளங்களால் திரையரங்குகளில் போடப்படும் திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்படுகிறது. தற்போது உள்ள 4 வாரங்கள் கழித்துத் தான் படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை மாற்றி 8 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியிட வேண்டு எனத் தியேட்டர் உரிமையாளர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளைப் பராமரிக்க அரசு கொடுக்கும் டிஎம்சியில் (பராமரிப்பு செலவு) 8 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசிடம் கேட்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறிய திரையரங்குகளில் புதிய படங்களைத் திரையிட அனுமதிக்குமாறு வைத்த கோரிக்கை குறித்துப் பரிசீலிக்கப்படும். இந்தியாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் தான் (lbt) என்ற உள்ளாட்சி வரி உள்ளது.
எனவே, இதனைத் தங்களால் செலுத்த முடியாததால் அதனை ரத்து செய்யத் தமிழக அரசிடம் வலியுறுத்திப் பேசப்படும் எனக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் ஜூலையில் தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணத்தைக் குறைப்பது பற்றி தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
தற்போது, சிறிய படங்களைப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. அவர்கள் பார்க்க ரெடி என்றால் நாங்கள் திரையரங்குகள் தருவதற்குத் தயாராக உள்ளோம்” என்று கூறினார். ரீ ரீலீஸ் செய்கின்ற திரைப்படத்திற்கு மட்டும் டிக்கெட் விலையைக் குறைக்கிறார்கள். ஆனால், புதுப் படத்திற்கு ஏன் விலை குறைக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் தவறே செய்யாத உத்தமர் இல்லை. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன.
அதில், ஒருவர் செய்வதால் மற்றவர்களைக் குறை சொல்ல முடியாது என்றார். படம் வெளியாகி சில தினங்களிலேயே வெற்றி விழா நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, அது விளம்பர யுக்தி. சினிமாவில் தங்களது படத்தினை வசூல் அதிகமாக வந்து உள்ளது என விளம்பரம் செய்து கொள்ளும் பொழுது மக்கள் அதிகமாக வருவார்கள் என்ற ஆசைதான் என்றார். மேலும் திரைப்படங்களுக்கான பங்குத் தொகை தற்போது அதிகமாக உள்ளது.
எனவே, வரும் 1ஆம் தேதிக்கு மேல் 60% சதவீதம் அதிகமாகக் கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளோம் என்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளும் திரையிட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார். எந்தத் தொழிலிலும் கட்டுப்படி ஆகாத பட்சத்தில் மூடிவிட்டுச் சென்று விடுவர். நாங்களும் கட்டுப்படி ஆகவில்லை என்றால் திரையரங்குகளை மூடிவிட வேண்டியது தான்.
நடிகர் விஜய் அரசியலுக்குச் சென்று விட்டதால் உங்களுக்குப் பாதிப்பு இருக்குமா என்ற கேள்விக்குச் சினிமா என்பது சுழற்சியின் அடிப்படையில் தான் நடந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் வருவார். அவங்க என்ன வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. அதில் நாம் கருத்து சொல்ல முடியாது. யார் எங்குப் போனாலும் அந்தந்த தொழில் நடந்து கொண்டு தான் இருக்கும். படத்துக்குத் தான் வசூலே தவிர நடிகருக்குக் கிடையாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்.. நடிகர் கார்த்திக் ரசிகர்கள் எதிர்ப்பு..!