சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'தி கோட்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படி வசூல் மன்னனாக இருக்கும் போதே அரசியலில் ஈடுபட முடிவு செய்து, 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தொடங்கினார். அன்றைய தினத்தில் இருந்தே அவரது நகர்வுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. ஒரு புறம் தான் திட்டமிட்டிருந்த படங்களிலும், மறுபுறம் கட்சியின் செயல்பாடுகளிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார்.
குறிப்பாக, இரண்டு கோடி உறுப்பினர்கள் இலக்கு, தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, கட்சியின் கொடி, முதல் மாநில மாநாடு ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகம் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார்.
அடுத்தகட்ட நகர்வாக தவெக மாநாடு பணிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்த கட்சியாக அங்கீகரித்தது. அதுமட்டுமின்றி, மாநாடு நடத்துவதற்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்துள்ளது.
இதையும் படிங்க:தளபதி - 69 ஷூட்டிங் எப்போது தொடங்கும்? - வெளியான புது அப்டேட் - Thalapathy 69 update
மேலும், கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே அறிக்கை மூலம் அறிவித்திருந்தார்.
அதன்படி, வெங்கட் பிரபு படத்தை முடித்துவிட்ட அவர் அடுத்து தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக, இயக்குநர் எச்.வினோத் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால், நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க சென்றதால், தற்போது விஜய் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இது அரசியல் படமாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், அனைவரும் விரும்பும் கமர்ஷியல் படமாக இருக்கும் என ஒரு அவார்டு நிகழ்ச்சியில் எச்.வினோத் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், விஜய் நடிக்கும் 69வது படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதனை உறுதிபடுத்தும் விதமாக, தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் 69வது படம் சம்பந்தமான அறிவிப்பு நாளை(செப் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.