சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த வாழை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளி படிக்கும் சிறுவர்கள் வாழைத்தார் சுமக்கும் வேலைக்குச் செல்கின்றனர். அங்கு முதலாளியால் சிறுவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது இப்படத்தின் மையக்கதையாகும். இப்படம் வெளியானது முதல் சினிமா பிரபலங்கள் முதல் பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வாழை திரைப்படம் பார்த்துள்ளார். இதனையடுத்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை திரைப்படத்தை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.
படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.