சென்னை: தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்றிரவு காலமானார். சென்னையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளால் சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87.
தமிழில் 1961ஆம் ஆண்டு வெளியான 'கொங்கு நாட்டு தங்கம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புஷ்பலதா தொடர்ந்து 'யாருக்கு சொந்தம்',' நானும் ஒரு பெண்', 'ஏழை பங்காளன்', 'பச்சை விளக்கு' என பல்வேறு படங்களில் நடித்தார். கதாநாயகி, துணை கதாபாத்திரங்கள் என அனைத்திலும் நடித்து முக்கியமான நடிகையாக திகழ்ந்தார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், எஸ்.எஸ் ராஜேந்திரன் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 1963ஆம் ஆண்டு வெளியான 'மெயின் பி லட்கி ஹூன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்த புஷ்பலதா, 'நர்ஸ்' என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.
1980, 90களில் ரஜினிகாந்தின் ’தர்ம யுத்தம்’, ’நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ’சிம்லா ஸ்பெஷல்’, ’சகலகலா வல்லவன்’, ’கல்யாணராமன்’ ஆகிய படங்களிலும் புஷ்பலதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான 'பூவாசம்' படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு நடிகை புஷ்பலதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக மருத்துவமனை சென்று சிகிச்சையும் பெற்றுள்ளார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க:ஆஸ்கர் இறுதிப்பட்டியலிலுள்ள ’அனுஜா’ குறும்படம் ஓடிடியில் வெளியீடு...!
புஷ்பலாதாவின் கணவர்தான் நடிகர் ஏ.வி.எம் ராஜன். புஷ்பலதாவும் ஏ.வி.எம் ராஜனும் ‘நானும் ஒரு பெண்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்தனர். பிறகு திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். சண்முகசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஏ.வி.எம்.ராஜன், ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த படங்களில் அதிகமாக நடித்ததால், தனது பெயரை ஏ.வி.எம்.ராஜன் என மாற்றிக் கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் மகாலட்சுமி, கன்னடம், தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.