சென்னை: 2024ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள் குறைவு தான். மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெற்றி பெறவில்லை. குறிப்பாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 கடுமையான எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. அதேபோல் டிமான்டி காலனி 2, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் பெரிய அளவில் வசூலை பெறவில்லை. வரும் 2025ஆம் ஆண்டு தமிழில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இரண்டாம் பாகம் பார்ட் 2 திரைப்படங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
சர்தார் 2: இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் 'சர்தார்'. உளவாளிகள் மற்றும் தண்ணீர் மாஃபியா குறித்து பேசிய ’சர்தார்’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல ஆக்ஷன் திரைப்படமாக பெரும் வரவேற்பைப் பெற்று, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ’சர்தார் 2’ படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்தியன் 3: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் ’இந்தியன் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான ’இந்தியன் 2’ திரைப்படம் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. ’இந்தியன் 2’ படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. சேனாபதியின் முன்கதையை மையமாக கொண்டு ’இந்தியன் 3’ திரைப்படம் உருவாகிறது. இப்படம் முதலில் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படும் என தகவல் வெளியான நிலையில், அதனை இயக்குநர் ஷங்கர் மறுத்துள்ளார்.
ஜெயிலர் 2: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'ஜெயிலர்'. இத்திரைப்படம் உலக அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகம் உருவாகிறது. ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ வீடியோ படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது