சென்னை:கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'சர்தார்'. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ் எஸ்.லட்சுமண் குமார் தயாரித்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து, நடிகை ராசி கன்னா, லைலா, இந்தி திரைப்பட நடிகர் சங்கி பாண்டே, ரித்விக், யூகி சேது, அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். அதிலும் குறிப்பாக இப்படத்தின் மூலமாக இந்தி திரைப்பட நடிகர் சங்கி பாண்டே தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதும், லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரைக்கு வந்ததும் இந்தப் படத்தின் ஒரு சிறப்பாகும்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில், நல்ல அக்ஷன் திரைப்படமாக மிகுந்த வரவேற்பைப் பெற்று, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்தது மட்டும் அல்லாது, 2022ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாகவும் பெயர் பெற்றது.
இந்த நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி, தற்போது படப்பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் நேற்றிரவு இப்படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
இந்த படப்பின்போது, எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை (54) பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்த பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்பார விதமாக நடந்த இந்த விபத்தில், ஏழுமலையின் மார்புப் பகுதியில் பலத்த அடிபட்டு நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சிகிச்சை பெற்று வந்த சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கு மேலாக சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என அனைவருடனும் பணியாற்றியுள்ளார் ஏழுமலை.