சென்னை:தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சங்கத்தின் 23 பதவிகளுக்கு இன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர்கள் போஸ் வெங்கட், நாசர், அம்பிகா, விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவிட்டுச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை அம்பிகா, “யார் வெற்றி பெற்றாலும் நல்லது தான். நல்லதே செய்யுங்கள், அதுதான் இங்கு தேவை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். மேலும், இயக்குநர்கள் பட்டியலில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “அதுக்கு காரணம் லக்கு தான். ஏனென்றால், தயாரிப்பாளர்கள் எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள. ஆண் இயக்குநருக்கும், பெண் இயக்குநர் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளது. அந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்று நினைக்கிறோம்” என்றார்.