சென்னை: நடிகர் கவின், நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று இருவரும் தங்களது சமூக வலைதள பக்கம் மூலம் இத்தகவலை உறுதி செய்துள்ளனர். பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கும் படத்தில் கவின், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கவின் நடிப்பில் கடைசியாக வெளியான ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இதனைதொடர்ந்து கவின், இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கும் 'ப்ளடி பெக்கர்' (bloody beggar) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிச்சைக்காரன் வேடத்தில் கவின் நடித்து வெளியான ப்ரோமோ கவனத்தை ஈர்த்தது.
அதேபோல் நடிகை நயன்தாரா தற்போது 'மன்னாங்கட்டி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.