சென்னை: நடிகர் சூர்யா மலையாள இயக்குநர் பசில் ஜோசஃப் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ரெட்ரோ’ (Retro) படத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள ரெட்ரோ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் வெளியான ’கங்குவா’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் ரெட்ரோ திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டுமென சூர்யா ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனிடையே நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் த்ரிஷா உள்ளிட்ட பலருடன் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 45 திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படங்களை முடித்துக் கொண்டு சூர்யா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.