சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’அமரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது.
மறைந்த முன்னாள ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அமரன் படத்தில் முகுந்த வரதராஜனின் காதல் வாழ்க்கை குறித்தும், ராணுவத்தில் அவர் சந்தித்த சவால்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் அறிவிக்கப்பட்டது முதல் பெரிய ஆரவாரம் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கேரக்டர் அறிமுக வீடியோ பெரியளவில் கவனம் பெற்றது.
சாய் பல்லவி கேரக்டர் வீடியோ பார்த்தது முதல் ரசிகர்கள் அவரை கொண்டாட தொடங்கினர். அமரன் திரைப்படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோரது நடிப்பை திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வந்தனர். சாக்னில்க் சினிமா வர்த்தக இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்படி அமரன் திரைப்படம் இதுவரை உலக அளவில் 321.79 கோடி வசூல் செய்துள்ளது.