சென்னை: எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுத்தில் 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலின் காப்புரிமையை பெற்றுள்ளார். இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் பல வருடங்களாக ஆயத்தமாகி வருகிறார்.
இந்தியன் 2 படத்திற்கு முன்பு பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் பட இந்தி வெர்ஷனை ஷங்கர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து ஷங்கர், வேள்பாரி நாவலை ரன்வீர் சிங், மற்றும் யாஷ் ஆகியோரை வைத்து இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பின்னர் பட்ஜெட் பிரச்சனை காரணமாக கைவிட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "சு.வெங்கடேசனின் வேள்பாரி நாவலின் காப்புரிமையை கொண்டுள்ளவன் என்ற முறையில் அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது எனவும், எனது அனுமதியின்றி படங்களில் பயன்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை சந்திக்க நேரிடும்" என பதிவிட்டார்.