சென்னை: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சித்திரp பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அதே நாளில், சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'கங்குவா' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், கோலிவுட்டில் பல மாதங்களுக்குப் பிறகு இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இப்போது முதலே ரஜினி, சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சண்டை போட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் வேட்டையன் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னதாக கங்குவா என்ற பெரிய பட்ஜெட் படத்தோடு வேட்டையன் வெளியாவது இரண்டு படங்களுக்கும் வசூலில் பாதிப்பு ஏற்படுத்தும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.