சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் உடல் நலம் பெற்று மீண்டும் கூலி படப்பிடிப்பில் இணைந்தார். தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கூலி படத்தின் ப்ரோமோ மூலம் இப்படம் தங்கம் கடத்தல் தொடர்பான கதை என தெரிகிறது.
மேலும் இப்படத்தில் அமீர் கான் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.