சென்னை: சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் மிகப் பெரிய பொருட் செலவில் தயாராகியுள்ளது. இயக்குநர் சிவா இயக்கியுள்ள கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் மிகப் பிரமாண்டமாக வெளியாகிறது. கங்குவா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா தனக்கு சொந்தமாக ஒரு விமானத்தை வாங்கியுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த தகவலுக்கு நடிகர் சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது நெருங்கிய வட்டாரங்களில் ஈடிவி பாரத் விசாரித்த போது, ஒருமுறை சூர்யா விமானத்தில் பயணம் செய்த போது ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ என்றும், சூர்யா விமானம் வாங்கியுள்ளதாக வெளியான தகவல் துளியும் உண்மையில்லை என்றும் தெரிவித்தனர். தற்போது நடிகர் சூர்யாவும் தனக்கென தனி விமானம் வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும், அந்த விமானம் Dassault falcon 2000 என்ற சொகுசு ரக விமானம் எனவும் கதை கட்டி வருகின்றனர். சூர்யா வாங்கவில்லை என்றாலும், இந்த விமானத்தின் மீது அனைவரின் ஆர்வமும் குவிந்துள்ளது. இந்த Dassault falcon 2000 முதன்முதலில் ஆகஸ்ட் 1993இல் பயன்படுத்தப்பட்டது. இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானத்தில் மொத்தமாக 10 பேர் பயணிக்கலாம். வலுவான தனி ஜெட் விமானமாக பார்க்கப்படும் இதில் 27 வகைகள் உள்ளன.