சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் ஒரு போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். மேலும் செல்போன் , டிவி உள்ளிட்ட எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார். நடிகர்கள் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பதுண்டு. ஆனால் சில சமயங்களில் அந்த முடிவு அவர்களுக்கே பாதகமாக சென்று முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்துள்ளனர்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்தாண்டு 8வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா, சரத்குமார் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.