சென்னை:தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் (GOAT) திரைப்படத்தில் நடத்து வருகிறார். இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடலை இரண்டு தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
விசில் போடு எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்பாடலில், பல்வேறு சர்ச்சைக்கு உரிய வரிகள் இடம் பெற்றுள்ளதாகவும், பிரச்சினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி நடிகர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்ககோரி சமூக ஆர்வலர் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆர்டிஐ செல்வம் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், நடிகர் விஜய் பிரச்சனையை தூண்டுதல் மற்றும் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்கை கையில் எடுக்கட்டுமா? எனப் பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள், தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, சீமான், நடிகர் கமல், மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கும் இந்த வாசகம் ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது என்றும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான் எனும் வரிகள், நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார். நடிகர் விஜய் என்றும், குடிமகன் தான். நடிகர் விஜய் பாடிய பாடல் இளைஞர்களை சீரழிக்கும் வகையில் உள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார். எனவே விசில் போடு பாட்டை உடனடியாக சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படியும் மேலும், நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'நயந்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - Actor Raghava Lawrence