சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் கேரக்டருக்கு தேவைப்பட்டால் புகைப் பிடிக்க தயார் என கூறியுள்ளார். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தனியார் யூடியூப் சேனலில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் தான் நடிக்கும் படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார்.
தற்போது நடித்து வரும் SK23 குறித்தும், சுதா கொங்குரா இயக்கத்தில் நடித்து வரும் SK25 குறித்தும் நெறியாளர் கேட்டதற்கு, “முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு 90 சதவிதம் முடிந்துவிட்டது. அவர் சல்மான் கான் நடிக்கும் ’சிகந்தர்’ பட வேலைகளில் தற்போது பிஸியாக உள்ளார். அப்பட வேலைகள் முடிந்த பிறகு என் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும். இப்படத்தில் ஓபனிங் சாங் ஆகியவை இல்லாமல் சற்று வித்தியாசமான கதையாக இருக்கும்.
சுதா கொங்குரா இயக்கும் SK25 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமாக ஜெயம் ரவி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நான் கல்லூரி காலத்தில் அவரது படங்களை பார்த்துள்ளேன். ஒரு சீனியர் நடிகராக அவருடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.