சென்னை: தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பாடல்கள் தான் பல சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்திருக்கின்றன. பாடல்களுக்குப் பிறகு ரசிகர்களை ஈர்க்கும் விஷயம் என்னவென்றால் படத்தின் தலைப்புதான். பெரிய நடிகர்கள் அல்லாத பல சின்ன நடிகர்களின் படங்களுக்கு தலைப்பு தான் மிகப்பெரிய முகவரியாக அமைந்திருக்கிறது.
வித்தியாசமான தலைப்புகளையும், ஈர்க்கக்கூடிய படத்தலைப்புகளையும் கடந்து தான் வந்திருப்போம். ஏற்கனவே வெளிவந்த பழைய திரைப்படத்தின் தலைப்பை தங்களது திரைப்படத்திற்கு வைப்பதன் மூலம் எளிதில் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்ற யுக்தியை பன்னெடுங்காலமாக தமிழ் சினிமா பார்த்து வருகிறது.
இப்போது இந்த விஷயம் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் 1950களில் இருந்தே இது கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1958ஆம் ஆண்டு வெளியான உத்தம புத்திரன். ஏனென்றால் இதே தலைப்பில் பி.யூ. சின்னப்பா நடித்து 1940ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. எனவே பழைய படங்களின் தலைப்பை பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல.
அந்த வகையில் தற்போது சிவாஜி கணேசனின் பராசக்தி படத் தலைப்பை சிவகார்த்திகேயனின் 25வது படத்திற்கு சூட்டியுள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தன் படத்திற்கு பழைய பட தலைப்பை பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் 5 முறை இதுபோல் பழைய படங்களின் தலைப்பை பயன்படுத்தி இருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல்
சிவகார்த்திகேயனை கதநாயகனாக மக்கள் ஏற்றுக்கொண்ட திரைப்படம் எதிர்நீச்சல். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியானது எதிர்நீச்சல். இதே தலைப்பில் பழம்பெரும் நடிகர் நாகேஷ் நடிப்பில் ஒரு படம் வெளியாகியுள்ளது. 1968ஆம் ஆண்டு வெளியான இந்த எதிர்நீச்சல் திரைப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
எதிர்நீச்சல் போஸ்டர் (Credits: Film Posters) நாகேஷ் அதுவரை நடித்து வந்த நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு முழுநீள கதையின் நாயகனாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயனும் இந்த படத்தில்தான் முதன்முதலில் கதநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காக்கி சட்டை
எதிர்நீச்சல் வெற்றிக்கு பின்னர் துரை செந்தில்குமார் - சிவகார்த்திகேயன் இணைந்த படம் காக்கி சட்டை. 2015ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன் அதுவரை செய்யாத ஆக்ஷன் ரோலை செய்திருந்தார். இதே பெயரில் 1985ஆம் ஆண்டே கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் வெளிவந்துள்ளது. அதுவும் ஆக்ஷன் த்ரில்லர் வகைமை தான். 1985ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் கமல்ஹாசனின் காக்கி சட்டை. இரு படங்களின் முதன்மை கதாபாத்திரங்கள் போலீஸ் என்பதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.
காக்கி சட்டை போஸ்டர் (Credits: Film Posters) வேலைக்காரன்
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படம் வேலைக்காரன். 2017ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் அதுவரை சிவகார்த்திகேயன் பேசாத சமூக கருத்துகளுடன் களமிறங்கினார். கார்ப்பரேட் கம்பெனி ஒன்றின் வேலைக்காரனை சேரும் சிவகார்த்திகேயன் அதில் நடக்கும் தவறுகளை களைகிறார்.
வேலைக்காரன் போஸ்டர் (Credits: Film Posters) இதே தலைப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் வேலைக்காரன். இதிலும் பெரிய பணக்கார குடும்பத்தில் வேலைக்காரனாக பணிக்கு சேரும் ரஜினிகாந்த் அங்கு நடக்கும் தவறுகளை தடுத்து நிறுத்துவார். இந்த ஒற்றுமையால் சிவகார்த்திகேயன் தன் படத்திற்கு இந்த தலைப்பை பயன்படுத்தியிருக்கலாம்.
மாவீரன்
சிவகார்த்திகேயன் மீண்டும் பயன்படுத்திய மற்றொரு ரஜினி பட தலைப்பு மாவீரன். கடந்த 2023ஆம் ஆண்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவாகர்த்திகேயன் நடிப்பில் வெளியான இப்படம் அவரது நடிப்பு பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் குறைவாக வெளிவந்த பேண்டசி ஜானரில் அமைந்திருக்கும் இப்படம். இதே தலைப்பில் 1986ஆம் ஆண்டே ரஜினிகாந்தின் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதையாக அமைக்கப்பட்டிருக்கும்.
மாவீரன் போஸ்டர் (Credits: Film Posters) அமரன்
நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமரன்’. அப்படத்தின் தலைப்பை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான தன் படத்திற்கு பயன்படுத்தி இருந்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது இப்படம். கார்த்திக்கின் ’அமரன்’ திரைப்படமானது இதற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாத கேங்ஸ்டர்களின் வாழ்க்கையை காட்டுவதாக அமைந்திருக்கும். 1992ஆம் ஆண்டின் கார்த்திக் நடித்த அமரன் முக்கியமான வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
அமரன் போஸ்டர் (Credits: Film Posters) இதையும் படிங்க:'பொன்னியின் செல்வன்' ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
பராசக்தி
பராசக்தி போஸ்டர் (Credits: Film Posters) பராசக்த் திரைப்படம் மூலம் ஆறாவது முறையாக சிவாகார்த்திகேயன் பழைய படத் தலைப்பை பயன்படுத்தியுள்ளார். 73 ஆண்டுகளுக்கு முன்பு 1952ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தில், சிவாஜி அறிமுகமானார். அப்போதிருந்த வறுமை, மூடநம்பிக்கைகள் போன்ற சமூக அவலங்களை மையக்கதையாக கொண்டு பராசக்தி திரைப்படம் கடுமையாக விமர்சித்திருந்தது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயன் உடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 1960கள் காலகட்டத்தில் நடக்கும் கதைக்களமாக இப்படம் உருவாகுகிறது.