சென்னை:லைக்கா புரொடக்சன்ஸ் - சுபாஸ்கரன் தயாரித்து, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படமான 'இந்தியன் 2' ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் பா.விஜய் வரிகளில் உருவான இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக ஜூன் 1-இல் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, நாசர், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், மிர்ச்சி சிவா, ரோபோ சங்கர், இயக்குநர்கள் ஷங்கர், லோகேஷ் கனகராஜ், நெல்சன், நடிகைகள் அதிதி ஷங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தக் லைஃப் படப்பிடிப்பில் இருந்ததால் நடிகர் சிம்பு தாமதமாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சிம்பு, “தக் லைஃப் படத்தில் கமலுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதை முடித்துவிட்டுதான் இங்கு வந்தேன். இந்தியன் 2 படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். பான் இந்தியா படம் எப்போது உங்களிடம் எதிர்பார்க்கலாம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ்டிஆர் 48 மற்றும் தக் லைஃப் வரும் என்றார்.
உடம்புதான் முக்கியம் என்று மேடையில் பேசியது ஏன் என்ற கேள்விக்கு, “எல்லோருக்கும் வாழ்க்கையில் அது நடக்கும் என்று நினைக்கிறேன். நேரம் தான் அதுக்கு காரணம். இந்த உலகத்தில் ரொம்ப கஷ்டப்படுபவர் உண்மையைப் பேசுபவர்கள் தான். நான் நிறைய பேசி இருக்கேன்” என்றார்.