சென்னை:ஆதம் பாவா இயக்கத்தில், அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆதம் பாவா எழுதி இயக்கி தயாரித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் அமீர் நடித்துள்ளார். இந்த படத்தில் அமீர் நடிக்கவில்லை, வாழ்ந்துள்ளார். அமீர் ஸ்க்ரீனில் ரகளை செய்வது விளையாடுவது போல செயல்பட்டுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ஒரு முக்கியப் பங்கு கொண்டுள்ளது. கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் மிகச்சிறப்பான உரையாடல்கள் உள்ளது. வாக்குக்கு காசு அளிக்கப்படுகிறது என நடக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் புரிதலை உருவாக்கும் ஒரு படம் இது. தேர்தலில் நிற்பது தான் அரசியல் என நினைக்கக்கூடாது. மக்களின் பிரச்னைகளை குரல் கொடுத்து கேள்வி கேட்பது அரசியல் தான்.
தேர்தலுக்கு முன்னால் இந்த படம் வெளியாகி இருந்தால், பொதுவாக மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி செய்திருக்கும். தாமரை கண்ணீரில் மலராது. இசை மற்றும் மொழி இரண்டும் ஒன்று தான். இளையராஜா ஒரு படைப்பாளியாக அங்கீகாரம் வேண்டும். இளையராஜா தனது பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என கூறவில்லை. அந்த கலைப் பொருளை உருவாக்கியதில் என்னுடைய பங்கு உள்ளது.
அதில் எனக்கு கிடைக்க வேண்டியது வேண்டும் என்று கூறுகிறார். இளையராஜா, வைரமுத்து பிரச்சினை பேசி தீர்க்கப்பட வேண்டும்” என்றார். மேலும் பேசிய அவர், “10 ஆண்டுகளுக்கு முன்பாக மாற்றத்தை ஏற்படுத்தியது தான் ஹீரோ என்று கூறுவார்கள். லாரன்ஸ் மக்களுக்கு பல்வேறு நல்ல செயல்களை செய்கிறார். போலி மருத்துவர்களை தான் நீட் உருவாக்குகிறது. இந்திய நாட்டின் தரமான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கு அமெரிக்க நிறுவனம் ஏன் தேவைப்படுகிறது?” என்று பேசினார்
இதையும் படிங்க:அப்புக்குட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி.. எதற்காக தெரியுமா? - Actor Appukutty Birthday