சென்னை: இரா சரவணன் தமிழில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர். இவர் தற்போது சசிகுமார் நடித்துள்ள நந்தன் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வருகிற 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சசிகுமார், இரா சரவணன் ஆகிய படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் எச்.வினோத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதனையடுத்து விழா மேடையில் பேசிய சீமான், “பல நூறு ஆண்டுகளாக இம்மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளியிடும் விழாவாக இதை பார்க்க வேண்டும். இசையால் உலகின் எல்லா துயரையும் போக்க முடியும். நந்தன் வெளியிடுகிற இசை இறைவனைக் காண அல்ல, நல்ல மனிதனைக் காண. நந்தன் இசை இதயத்தை தடவப் போவதில்லை பேரளவில் தாக்கும். மாட்டுத்தோல் பறை இசை அல்ல மனிதனின் தோலால் உருவான இசை. ஜிப்ரானுக்கு பாராட்டுக்கள்.
பாலாஜி சக்திவேல் கதாபாத்திரம் மொத்த படத்தையும் தாங்குகிறது. பின்னணி இசையில் ஒரு படத்தை தூக்கி நிறுத்தும் ஒரே ஆள் இளையராஜா தான். அவருக்குப் பிறகு தற்போது இளம் இசை அமைப்பாளர்கள் வந்துவிட்டனர். படத்தைப் பார்த்து எனது மனைவி அழுது விட்டார். நம்மைப் போன்ற சக மனிதர்கள் எப்படி நசுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் பேசுகிறது. நான் ஏழை என்பதை மாற்றிவிடலாம், ஆனால் சாதியை எங்கு சென்றாலும் மாற்ற முடியாது. நாட்டின் குடியரசுத் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் யோசித்து பாருங்கள்.