சென்னை:தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக உள்ள சமந்தா உடல் நலத்தில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில், தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தொடர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா இன்ஸ்டாகிராமில் தனது சிகிச்சை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், சமந்தா அண்மையில் தனது இன்ஸ்டா பதிவில், சுவாச பிரச்சினைக்கு மாற்று சிகிச்சையாக 'நெபுலைசர்’ பயன்படுத்தலாம் என்று பதிவிட்டு புகைப்படமொன்றையும் பகிர்ந்திருந்தார். அதற்கு எதிர்வினைகளும் கிளம்பின.
மருத்துவர் எதிர்வினை: இந்த சூழலில், மருத்துவர் ஒருவர் சமந்தாவின் பதிவை பகிர்ந்து கடுமையாக தாக்கி பேசினார். அதில், '' ஆஸ்துமா மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகளுக்கு நெபுலைஸ் செய்யக்கூடாது என எச்சரிக்கை இருக்கிறது என்றும் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் இந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்'' என கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து சமந்தா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது; '' நான் கடந்த சில வருடங்களாக, பல்வேறு மருந்துகள் வகைகளை எடுக்க வேண்டியிருந்தது. மிகவும் படித்து தகுதி வாய்ந்த வல்லுநர்கள் அறிவுறுத்திய அனைத்தையும் முயற்சித்தேன். தொடர்ந்து அதை சுய ஆராய்ச்சியாக செய்து சாத்தியமானது. இந்த சிகிச்சைகள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை. இந்த சிகிச்சைகளை பெற முடியாதவர்களிடத்தில் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எப்போதும் நினைப்பேன்.
நீண்ட காலமாக நான் எடுத்துக்கொண்ட வழக்கமான சிகிச்சைகள் என்னை மேம்படுத்தவில்லை. இந்த இரண்டு காரணங்களும் என்னை மாற்று சிகிச்சைகள் மற்றும் தெரப்பிகளை படிக்க வழிவகுத்தது. முயற்சியும், பிழையையும் அடுத்து ரிசல்ட் தரும் சிகிச்சைகளை கண்டேன். இதற்கு எனது வழக்கமான மருத்துவ செலவுகளில் ஒரு பகுதிதான்.
நான் அனுபவமின்றி ஒரு சிகிச்சையை பரிந்துரைக்கவில்லை. கடந்த இரண்டு வருடங்கள் நான் எதிர்கொண்ட மற்றும் கற்றுக்கொண்ட அனைத்தின் காரணமாக நல்ல எண்ணத்துடன் பரிந்துரைக்கிறேன். குறிப்பாக, நிதி பற்றாக்குறையால் இந்த சிகிச்சையை எல்லோராலும் பெற முடியாது. அதுமட்டுமின்றி, இறுதியாக நாம் அனைவரும் படித்த, தகுதி வாய்ந்த மருத்துவரைதான் அணுகுகிறோம். எனக்கு பரிந்துரைத்த மருத்துவர் எம்டி முடித்துவிட்டு DRDO -வில் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர், தனது படிப்பை கடந்து கடைசியில் மாற்று சிகிச்சையைதான் தேர்ந்தெடுத்துள்ளார்.
பணம் சம்பாதிக்க நோக்கமில்லை: சோசியல் மீடியாவில், ஒருவர் எனது போஸ்ட்டையும், அதன் நோக்கத்தையும் தாக்கி பேசியுள்ளார். அவர் ஒரு மருத்துவர் என்பதால் என்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் என்னை சிறையில் தள்ள வேண்டும் என கடுமையான சொற்களால் பேசியுள்ளார். நான் ஒரு பிரபலமாக எனது போஸ்டை போடவில்லை. சிகிச்சைகள் தேவைப்படுபவர்களுக்காக அதை பதிவிட்டிருந்தேன். பணம் சம்பாதிக்கவோ அல்லது மற்றவர்களை அங்கீகரிக்கவோ நான் போஸ்டுகளை போடுவதில்லை. வழக்கமான சிகிச்சைகள் வேலை செய்யாத பட்சத்தில் நான் மேற்கொண்ட மாற்று சிகிச்சைகள் மற்றவர்களின் ஆப்ஷனாக இருக்கலாம் என்ற நோக்கத்துடன் பரிந்துரைத்தேன்.
மருந்துகள் வேலை செய்யாதபோது நாம் அதை கைவிட முடியாது. நான் நிச்சயமாக கைவிட தயாராக இல்லை. என்னை விமர்சித்த மருத்துவர் என்னை பின்தொடராமல் எனது போஸ்டில் நான் டேக் செய்துள்ள மருத்துவரை விவாதத்துக்கு அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படி நடந்தால் இரு தகுதி வாய்ந்த வல்லுநர்கள் பேசிக்கொள்வதில் இருந்து நான் எதைவாது கற்றுக்கொண்டிருப்பேன்.
சிகிச்சைகள் பற்றிய தகவல்கள் எனது உடல் நலத்துக்கு உதவியாக இருந்துள்ளது. மற்றவர்களின் உடல்நலத்துக்கும் அதைத்தான் நான் விரும்புகிறேன். யாருக்கும் தீங்கிழைப்பது எனக்கு நோக்கமல்ல. சிகிச்சை பற்றிய விஷயங்களில் நான் எப்போதும் கவனமாக இருப்பேன். மற்றவர்களுக்கும் உதவ வேண்டும். அனைவரும் உதவுங்கள்.
நான் பல நல்ல அர்த்தமுள்ள மனிதர்களைக் கொண்டிருந்தேன். அவர்கள், ஆயுர்வேதம், ஹோமியோபதி, குத்தூசி மருத்துவம், திபெத்திய மருத்துவம், பிரானிக் ஹீலிங் போன்றவற்றை பரிந்துரைத்துள்ளனர். அதுபோலவே, நானும் எனக்கு உதவியாக இருந்த சிகிச்சைகளை பகிர்கிறேன். உடல்நலப் பிரச்சினைகளைக் கையாளும் நம்மில் பலருக்கு அந்த உதவி தேவை என்று எனக்கு தெரியும்'' என சமந்தா அந்த பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மருத்துவமனையில் மனைவி ஷாலினி.. 'விடாமுயற்சி' ஷூட்டிங்கில் இருந்து திடீரென சென்னை திரும்பிய அஜித்