மும்பை: சைஃப் அலி கான் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாளம் தெரியாத நபரை இன்று (ஜன.19) அதிகாலை தானேவில் வைத்து கைது செய்துள்ளனர் மும்பை போலீசார். தாக்குதல் நடத்திய நபரின் மொபைல் போன் டவரின் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர் போலீசார். குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹிராநந்தனி தொழிலாளர் முகாம் (Hiranandani workers' camp) அருகே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் விஜய் தாஸ், பிஜோய் தாஸ், முகமது இலியாஸ் உள்ளிட்ட பல பெயர்களைப் பயன்படுத்தியதை போலீஸார் உறுதி செய்தனர். மும்பை காவல்துறையின் அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, வடவலி ( Vadavli) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹிராநந்தனி தோட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மொபைல் டவரின் இருப்பிடமானது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது மும்பையின் கர் (Khar) காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மும்பை காவல்துறை சார்பில் நடபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், குற்றம் சாட்டப்பட்ட நபரை பற்றி மேலதிக தகவல்கள் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (ஜன்.18) சனிக்கிழமையன்று சத்தீஸ்கரில் உள்ள துர்க் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் சந்தேகத்திற்கிடமான ஒரு நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 31 வயதான அந்த நபர் மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில்வே நிலையத்திலிருந்து கொல்கத்தா ஷாலிமார் வரை செல்லும் ஜானேஸ்வரி எக்பிரஸ் (Jnaneshwari Express) ரயிலில் பயணித்துள்ளார்.
சைஃப் அலி கான் குடியிருப்பு சிசிடிவி கேமரா பதிவுகளில் இருந்து பெறப்பட்ட புகைப்படத்தை மும்பை காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்பு படையிடம் பகிர்ந்துள்ளனர். அதன் அடிப்படையிலே இந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை மும்பை போலீசார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், சிவப்பு துணியின் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டு முதுகுப்பையுடன் ஒரு நபர் சந்தேகப்படும்படியாக 'சத்குரு சரண்' கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து படிக்கட்டுகளில் இறங்கி சென்றதாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷ் கைலாஷ் கண்ணோஜியா (Aakash Kailash Kannojia),"சந்தேகத்திற்குரிய நபர்" என்றே மும்பை போலீசார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணைகளுக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
54 வயதான சைஃப் அலி கான், வியாழக்கிழமை (ஜனவரி 16, 2025) அதிகாலையில் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபரின் தாக்குதலில் படுகாயமடைந்தார். பாந்த்ராவில் உள்ள சைஃப் அலி கானின் குடியிருப்பு 'சத்குரு ஷரன்' கட்டிடத்தின் 12 வது மாடியில் அமைந்துள்ளது. அங்கு நடந்த கொள்ளை முயற்சியின் போது அடையாளம் தெரியாத நபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார்.
அவர் உடனடியாக அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மருத்துவமனையை அடையும் வரை அவர் யாரென்றே தெரியவில்லை... நடிகர் சைஃப் அலி கானை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர்
வியாழனன்று தாக்குதல் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட கத்தியின் உடைந்த பகுதியை விசாரணையின் போது, போலீசார் கைப்பற்றியுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சைஃப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது முதுகுத்தண்டில் இருந்து 2.5 அங்குல உடைந்த கத்தியை அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் கொஞ்சம் 2 மிமீ ஆழத்தில் கத்தி குத்தியிருந்தால், அது பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கத்தியின் எஞ்சிய பகுதியை போலீசார் தேடி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார். சைஃப் அலி கானின் மனைவியும் நடிகருமான கரீனா கபூர் கான் தனது அறிக்கையில், தாக்குதல் நடத்திய நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். ஆனால் பீரோவில் இல்லாமல் வெளியில் இருந்த நகைகள் எதையும் அவர் தொடவில்லை என்று அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இந்த தாக்குதல் திட்டமிட்ட சம்பவம் போல தெரியவில்லை. முதன்மையான விசாரணையின்படி, தாக்குதல் நடத்திய நபர் எந்த கும்பலுக்காகவும் வேலை செய்யவில்லை. அவர் யாருடைய வீட்டிற்குள் நுழைந்தார் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.