ஹைதராபாத்: 'கேம் சேஞ்சர்' திரைப்பட நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படக்குழு தற்போது இந்தியா முழுவதும் தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆந்திர துணை முதல்வரும், நடிகர் ராம் சரணின் சித்தப்பாவுமான பவன் கள்யான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கேம் சேஞ்சர் நிகழ்ச்சிக்கு வந்து, திரும்பிச் சென்ற போது, காக்கிநாடாவை சேர்ந்த ஆரவா மணிகண்டா மற்றும் தோகடா சரண் ஆகியோர் விபத்தில் சிக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மருஹ்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.