ஐதராபாத் :சரித்தர படங்கள் மீதான ஈர்ப்பு என்பது அண்மைக் காலமாக சினிமா ரசிகர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. பாகுபலி படத்தை தொடர்ந்து வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் தற்போது சூர்யா நடிப்பில் தயாராகி வரும் கங்குவா உள்ளிட்ட படங்கள் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு என்பது மிகையாகாத அளவாகவே உள்ளது.
இந்நிலையில், ராமாயாண இதிகாசத்தை படமாக்கும் முயற்சி என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாலிவுட்டின் பிரபல இயக்குநரான நிதிஷ் திவாரி ராமாயணம் படத்தை இயக்க உள்ளார். இதில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபீர், சீதையாக சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.
ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யஷ், அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல், கும்பகர்ணன் கதாபாத்திரத்தில் பாபி தியோல், சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங், கைகேயி கதாபாத்திரத்தில் லாரா தத்தா நடிக்கப் போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 17ஆம் தேதி ராம நவமி அன்று படக்குழு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறத்தாழ 5 ஆண்டுகளாக இந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், ஒரு வழியாக கதாபாத்திரங்கள் தேர்வு உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக மும்பை மற்றும் லாஸ் ஏஞ்செல்சில் முக தோற்ற சோதனை உள்ளிட்ட முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில் மும்பையில் வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
மேலும், 2025ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த படத்தை இயக்குநர் நிதிஷ் திவாரி மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகியோர் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர். ராமாணயத்தை மையமாக கொண்டு இதற்கு முன் சில மொழிகளில் படங்கள் வந்திருந்தாலும் இந்த ராமாயணப் படம் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :அம்பானி வீட்டு விசேஷம்: ஷாருக்கான் வாயில் ஒலித்த ஜெய் ஸ்ரீராம்! பிரம்மாண்ட கொண்டாட்டம்!