சென்னை: ’அமரன்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தை இயக்கவுள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ், காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது முதல் திரைப்படமாக ரங்கூன் திரைப்படத்தை இயக்கினார். ரங்கூன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் ’அமரன்’ திரைப்படத்தை இயக்கினார்.
கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்கு வெளியான அமரன் திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டது. இதனை உறுதிபடுத்தும் வகையில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புசெழியன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷின் 55வது படமாக தயாராகிறது. 'D55' என அழைக்கப்படும் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்பட பூஜையில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்ட நிலையில், இப்படத்தில் வெற்றிமாறன் கதையில் ஈடுபட்டுள்ளாரா அல்லது படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.