வேலூர்: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ், சுபாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்
இப்படம் பிப்.9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படத்தை வரவேற்கும் விதமாகவும், படம் வெற்றி அடையவும் வேலூரில் உள்ள திரையரங்கத்தில் ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் இந்து கிறிஸ்து மற்றும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் இஸ்லாமிய தொப்பி அணிந்து தொழுகை நடத்தினர்.
பட்டாசுகள் வெடித்து, மயிலாட்டம், ஒயிலாட்டம் பறையடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மேளதாளத்துடன் நடத்தி ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும், நிகழ்ச்சியின் இறுதியாக தேங்காய், எலுமிச்சை மற்றும் பூசணி உள்ளிட்டவைகளில் கற்பூரம் ஏற்றி மும்மத வழிபாட்டு செய்து கொண்டாடினர்.