மதுரை: திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் மீது கொண்டுள்ள அபிமானத்தில் 'அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயில்' ஒன்றை உருவாக்கி கடந்த சில ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்.
இந்திய ராணுவத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கார்த்திக், விருதுநகர் மாவட்டத்திலுள்ள அஞ்சலகம் ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனது தந்தை சிவன் வழியில் ரஜினியின் தீவிர ரசிகராக உள்ளார். இந்த நிலையில், தற்போது மேட்ரிமோனி இணையதளம் ஒன்றை நடத்தி வரும் கார்த்திக், அதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து ரஜினிக்கு கோயில் கட்டியுள்ளார்.
அண்மையில் நவராத்திரி விழாவின் போது முன்னிட்டு ரஜினி இதுவரை நடித்த திரைப்பட கதாபாத்திரங்களைக் கொண்டு கொலு அமைத்திருந்தார். இக்கோயிலில் ஒவ்வொரு நாள் காலையும், மாலையும் பூஜைகள் நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் நாளை (டிச.12) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ரஜினி கோயிலில் இதுவரை இருந்த ரஜினி சிலைக்கு மாற்றாக மாப்பிள்ளை படத்தின் கதாபாத்திரத்தை மாடலாகக் கொண்ட புதிய உருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது குறித்து திருக்கோயில் நிறுவனரும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர அபிமானியமான கார்த்திக் கூறுகையில், ”கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து ரஜினியின் உருவச் சிலையை வைத்து வழிபட்டு வருகிறோம். குறிப்பிட்ட சிலை ரஜினியின் உருவ அமைப்பில் 50 விழுக்காடு மட்டுமே பொருந்தி வந்த காரணத்தால், அவரது 74வது பிறந்தநாளையொட்டி ’மாப்பிள்ளை’ திரைப்படத்தின் ரஜினி கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய சிலை 250 கிலோ எடையும், 3 அடி உயரமும் கொண்டதாகும். தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிலை 300 கிலோ எடையும், 3.5 அடி உயரத்தில் முழுவதும் கருங்கல்லால் ஆன சிலை ஆகும். பழைய சிலை மூலவராகவும், தற்போதைய சிலை உற்சவராகவும் ரஜினி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட சிலையை செய்வதற்கு மிகக் கடுமையாக சிரமப்பட்டோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இதற்காக முயற்சி மேற்கொண்டோம்.