சென்னை: மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பின்னர் கார்த்தி, விஜய், கமல்ஹாசன் என முன்னணி திரையுலக நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' (G Squad) எனும் தயாரிப்பு நிறுவனம் துவங்கி, தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக, 'உறியடி' விஜய் குமார் நடிப்பில் வெளியான 'ஃபைட் கிளப்' (Fight Club) படத்தைத் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' (Benz) படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ் (Passion Studious) நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்குக் கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தை ரெமோ, சுல்தான் ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார்.
முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ்-ன் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த படமான பென்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.