ஐதரபாத்:தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் புஷ்பா இரண்டாம் பாகம். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படத்தின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கியது.
இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், ராஷ்மீகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தை திட்டமிட்ட நாளில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் நிலவுவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பல்வேறு பணிகள் இன்னும் இறுதி கட்ட நிலையிலே உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளப் போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.