சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கங்குவா'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளானது. படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா ரூ.1000 கோடி வசூல் செய்யும் என்று கூறி வந்த நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் மோசமானது. இதுமட்டுமின்றி படத்தின் வசூல் குறைந்ததற்கு யூடியூப் விமர்சனங்கள்தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் குறித்து மோசமான கருத்துக்களை பகிர்ந்தனர் என்றும் யூடியூப் விமர்சனங்களும் மிகவும் மோசமாக இருந்ததாகவும் நடிகர்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் ரசிகர்கள் பேசியதாகவும் திரைத்துறையினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
கடந்த மாதம் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியானது முதல் பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. விமர்சகர்கள் பலர் படத்தில் பின்னணி இசை இரைச்சலாக உள்ளது, திரைக்கதை சரியில்லை என பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கங்குவா படத்தை கடுமையாக விமர்சித்து மீம்ஸ்கள் பதிவிட்டனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான நிலையில் எதிர்மார்த்த வசூலை பெறவில்லை. கங்குவா திரைப்பட விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா உள்ளிட்ட திரைத்துறையை சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் திரைப்பட விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் படங்கள் வெளியான மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திரைப்பட விமர்சனம் வழக்கு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா (Credits - ETV Bharat Tamil Nadu) பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைவதாகவும், திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அவதூறு பரப்புவது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும், விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் என்பதால் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மேலும் வழக்கு தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தயாரிப்பாளருமான டி.சிவா கூறியதாவது, "சரியாக விமர்சனம் சொல்வது 25 சதவீதம் யூடியூப் விமர்சகர்கள் தான். அவர்களும் பணம் சம்பாதிப்பதற்காக தரம் தாழ்த்தி விமர்சிக்கின்றனர். விமர்சனம் என்ற பெயரில் தனிநபர் தாக்குதல் நடக்கிறது. திரையரங்க உரிமையாளர்கள் யாரையும் உள்ளே அனுமதிப்பது இல்லை. யூடியூப்பில் விமர்சிப்பதை தடுக்க முடியாது. சினிமாவில் பலரது வாழ்க்கை, முதலீடு உள்ளது. குற்றம், குறைகள் இருக்கத்தான் செய்யும். நடுநிலையாக விமர்சனம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:புதுப் படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோரி வழக்குப் பதிவு!
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இதுபோல் விமர்சனம் செய்தால் அவர்கள் சும்மாவிடுவார்களா?. மூன்று நாள்கள் கழித்து விமர்சனம் செய்யுங்கள். விமர்சகர்கள் மக்கள் மனநிலையை மாற்றி விடுகின்றனர். விமர்சனம் இல்லாமல் இருந்தாலே மக்களின் வாய் மொழியில் தான் படம் ஓடும். அனைத்தையும் நடைமுறைப்படுத்த முயன்று வருகிறோம். நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.