சென்னை: பிரபல நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா பல்வேறு படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவரது படங்களில் நடனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் இருக்கும். குறிப்பாக ஏஆர் ரகுமான் இசையில் இவர் நடித்த படங்களில் பாடல்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தமிழ் மற்றும் இந்தியில் வெற்றி நடை போட்டார்.
பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி நடிகர் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் இந்தியில் ரௌடி ரத்தோர், ராம்போ ராஜ்குமார், வாண்டட், ராதே உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் பரபரப்பாகத் தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்து வரும் நிலையில், சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'ஜாலியோ ஜிம்கானா' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபுதேவா, ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் 25 வருடத்திற்குப் பிறகு இணைய உள்ளது. இந்த புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில், பிரபுதேவா கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலன், மின்சார கனவு ஆகிய படங்களைத் தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிக் கூட்டணி இணைந்துள்ள செய்தி அவர்களது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “ரஜினிகாந்த் பயோபிக்கில் நடிக்க விரும்பினேன்” - இளையராஜா திரைப்படம் நிகழ்ச்சியில் தனுஷ் பேச்சு!