கோயம்புத்தூர்:இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ள ‘போர்’ திரைப்படம், மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட்வே மாலிற்கு (Broadway), போர் திரைப்பட குழுவினர்களான இயக்குநர் பிஜோய் நம்பியார், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், நடிகை சஞ்சனா நடராஜன் ஆகியோர் வந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், “போர் திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். கல்லூரி, கல்லூரி மாணவர்களின் சேட்டைகள் குறித்து கதைக்களம் அமைந்துள்ளது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள்” என்றார்.
வில்லன் கதாபாத்திரம் அல்லது கதாநாயகன் கதாபாத்திரம் கடினமாக உள்ளதா என்ற கேள்விக்கு, “இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன். இந்த படத்தில் நான் வில்லனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். பொதுமக்கள் எதனை ஏற்றுக் கொள்கிறார்களோ, அதனைத் தொடர்ந்து செய்வேன்” என பதில் அளித்தார்.
மேலும், லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால், அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும் என்று தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நன்கு யோசித்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றார். அரசியல் கட்சி துவங்கிய பின்பு படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்கள் அதைதான் விரும்புவார்கள் என்றார்.
பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், “இந்த படத்தின் மூலமாக பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.