சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இத் திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் நடிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரதீப்போடு கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் காதல் மற்றும் அறிவியல் புனைவு கலந்த கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திலிருந்து ஏற்கனவே தீமா (Dheema) என்ற பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு நேற்று படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், இன்று சீமானும் பிரதீப் ரங்கநாதனும் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளது. சீமான் கட்சி ஆரம்பித்த பின் முழுநேரமாக சினிமாவில் பணியாற்றவில்லை. அவ்வப்போது கௌரவ தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ளார்.