ஹைதராபாத்:சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 14 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில், பாயல் கபாடியா இயக்கிய ALL WE IMAGINE AS LIGHT படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா சார்ந்த எந்த படமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வாகாத நிலையில், இந்த ஆண்டு பாயல் கபாடியாவின் படம் தேர்வாகி உள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ALL WE IMAGINE AS LIGHT படம் சிறந்த படத்திற்கான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்று சாதனை படைத்த பாயல் கபாடியாவால் இந்தியா பெருமை கொள்கிறது.
எஃப்டிஐஐ முன்னாள் மாணவர் பாயல் கபாடியா. இவரது திறமை தற்போது உலக அரங்கில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள செழுமையான படைப்பாற்றலின் ஒரு பார்வையை அளிக்கிறது. இந்த பாராட்டுக்கள் அவரை கௌரவிப்பதை மட்டுமல்லாமல், புதிய திரைப்பட தயாரிப்பாளர்களையும் ஊக்குவிக்கும்” என எக்ஸ் பதிவில் கூறி உள்ளார்.