சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சித்தார்த், விவேக், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில். இன்று சென்னை சத்யம் தியேட்டரில் இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல்ஹாசன், பாபி சிம்ஹா, ஜெகன், சந்தான பாரதி, நாசர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வந்து படத்தை பார்த்தனர். படம் முடிந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “நடிகர் கமல்ஹாசனும், நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவருடைய படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
திரைக்கலை பொழுதுபோக்கு கலையாக இல்லாமல், நல்ல பொழுதாக ஆக்கக்கூடிய சில படைப்புகள் உள்ளன. இப்படம் திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்ட படம் கிடையாது. அன்றாடம் நடக்கக்கூடிய அவலங்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் உள்ளிட்டவற்றை இப்படம் ஆழமாக எடுத்துரைக்கிறது. நமக்கு எதற்கு பிரச்சினை என்று கடந்து போவது தான் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை. அவரவர் வீட்டை சுத்தம் செய்யுங்கள்.